செவ்வாய், 24 ஏப்ரல், 2012

ஸலாம் சொல்வோம்...

உரைநடை


ஸலாம்.


'உமர்(ரழி) அவர்களும் அபூபக்கர்(ரழி) அவர்களும்
'ஸலாம்' சொல்வதில்
போட்டி போட்டுக் கொண்டார்கள்.'

எதற்காக இந்தப் போட்டி?

இரு மனிதர்கள் முகமனுக்காய் பரிமாறும்
ஒரு வாசகத்திற்காக போட்டி போடுவதா?




என் இந்து நண்பன் ஒருவனின் தொலைபேசி அழைப்பு கிடைத்தது.
பழக்கத்தில்,

'அஸ்ஸலாமு அலைக்கும்' கூறி பேச ஆரம்பித்தேன்.

'நீ இப்போது என்ன சொன்னாய்'
என்று கேட்டான்.

'உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக'
என்பது அதன் பொருள் என்றேன்.

நண்பன் சொன்னான்;
'எவ்வளவு அற்புதமான ஒரு வாசகம்,
இனி நானும் அப்படித்தான் சொல்வேன்' 
என்றான்.




யோசிக்க ஆரம்பித்தேன்..!

உண்மையில்,

அற்புதமான ஒரு வாசகம்.

சுவர்க்க வாயிலில் அமரர்கள் நம்மை வரவேற்கும்
வாழ்த்து வாசகம்.

உறவைப் பலப்படுத்த சிறந்த வாசகம்.

'முரண்பட்ட இருவரில்
ஸலாம் சொல்வதில் முந்திக் கொள்பவர்
உங்களில் சிறந்தவர்'
என்பது நபி வாக்கு.




'முரண்பாடுகள் இதயத்திலிருந்தே தொடங்குகின்றன.
சமாதானமும் இதயத்திலிருந்தே தொடங்க வேண்டும்'

என்பர்.

இதனாலோ..,
இரு இதயங்கள்
சந்திக்கும் போதே
சாந்தி வாசகம் பகிருமாரு கூறுகிறது இஸ்லாம்.

'உங்களில் அறிந்தவர்களுக்கும்
அறியாதவர்களுக்கும் ஸலாத்தைப் பரப்புங்கள்'
என்பதும் நபி மொழி'
(முஸ்லிம்)

சனி, 21 ஏப்ரல், 2012

'நான் மனிதர்களை வாசிக்கிறேன். புத்தகங்களோடு பழகுகிறேன்.'

உரைநடை

2) புத்தகங்களோடு பழகுகிறேன்...!




'புத்தகங்கள்,
நல்ல நண்பர்கள்'
என்பர்.


நண்பர்களற்ற நபர் இருக்க முடியாது.
அவன்,
துன்பத்தில்
இணையாக இருப்பான்.
இன்பத்தில்
துணையாக இருப்பான்.




'தோள் கொடுப்பவன் தான்
தோழன்'
என்பர்.


அவன்,
கஷ்டத்தில்
உதவுவான்,
நஷ்டத்தில்
பழகுவான்.



'நண்பன் இருந்தால்
எல்லாம் 'இலவசம்'
என்பர்.


அவன் 'வாசம்' எதுவோ
அது,
அவன் 'வசம்' எதுவோ
அது,
நமக்கு இலவசமாய் கிடைக்கிறது.
எனவே,
'நண்பன் சகவாசம்
தரும் எல்லாம்
இலவசம்.'



'சிநேகிதன்
சுயநலமியாக மாட்டான்'
என்பர்.


அவன்,
நல்லதை
சுட்டிக் காட்டுவான்.
கெட்டதை
குட்டிக் காட்டுவான்.



'உன் நண்பனைக் காட்டு,
உன்னை அறிந்துகொள்வேன்'
என்பர்.


அவன்,
அத்தர் வியாபாரியாயின்
அவன் 'வாசம்'
உன்னில் வீசும்.
அவன்,
துருத்தி வியாபாரியாயின்
அவன் புகை
உன்னில் புகையும்.

(ஹதீஸ்)


'என் மனதுக்குகந்த
நூல்களை மட்டும் கொடுத்து
என்னை,
என் வாழ்வு முழுதும் சிறையிட்டால்,
நான் கஷ்டப்பட மாட்டேன்'

என்கிறார் 'மாஜினி'


'ஷெக்ஸ்பியர்'
இப்படிப் பெருமைப்படுகிறார்;
'என்னையா ஏழை என்கிறாய்?
என்னிடமுள்ள நூல்கள்,
இராஜ்ஜியத்தினும் உயர்ந்தன அல்லவா?




"17 -வது வயதில் எனக்கு ஒரு நண்பன் அறிமுகமானான்.
இன்று வரை அவன் எனக்கு உறுதுணையாக இருக்கின்றான்.
அது வேறு யாருமல்ல புத்தகங்கள் தான்."
இது 'அப்துல் கலாம்.'


இறுதியாய்...

புது அகம் கொண்ட பக்கங்கள்
'புத்தகங்கள்'


நல் அகம் கொண்ட நபர்கள்
'நண்பர்கள்'


புத்தகங்கள்,
நல்ல நண்பர்கள்


புத்தகங்களோடு
பழகுகிறேன்.



மனிதர்கள் எல்லோரும்
எனக்கு நண்பர்கள்.


நண்பர்கள்,
நல்ல புத்தகங்கள்.

நண்பர்களை
வாசிக்கிறேன்.







இஸ்பஹான் சாப்தீன்
2011.01.01

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

'நான் மனிதர்களை வாசிக்கிறேன். புத்தகங்களோடு பழகுகிறேன்.'



உரை நடை

புத்தகங்களை உணர்ந்து வாசி!
மனிதர்களின் உணர்வுகளை வாசி!


1) நான் மனிதர்களை வாசிக்கிறேன்...!



சமூகம் ஒரு நூலகம்,
மனிதர்கள் திறந்த புத்தகங்கள்.
பல வர்ண முகப்பிலான படைப்புகள்.
சூட்டப்பட்ட பெயர்களாலும் வித்தியாசமானவைகள்.



மனிதர்கள்,
பலதும் பொதிந்த சஞ்சிகை நூல்கள்.
இவற்றின் ஒவ்வொரு அகமும் புது அகங்கள்.
எனவேதான், இவை 'புத்தகங்கள்'



னிதர்கள்,
இறைவனால் பிண்ணப்பட்ட நூல்கள்.
ஒவ்வொரு நூலும் வெவ்வேறு நூல்கள்.


இறைவன் சொல்கிறான்;

'நாம் மனிதர்களை,
ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம்.
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவே
கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்'
(அல் ஹுஜ்ராத்-13)

அறிதலில் தான் புரிதல் இருக்கிறது.
புரிதல் இன்மைக்கு மனித வாசிப்பு இன்மையே காரணம்.



மனிதர்கள் நூல்களாயின்,
ஒவ்வொரு நூலும்
பக்கங்களால் வரையறுக்கப் படாதவை.
வாசிக்க வாசிக்க
பக்கங்கள் அதிகரிக்கும்
அற்புத நூல்கள் இவை.


வித்தியாசமான,
திக் திருப்பங்கள் கொண்ட வரிகள் ஏராளம்.
வாசிக்கும் போதே
காலம் தரும் திருப்பங்கள் அவை.
திருப்பங்கள் தான் நூல்களை அடையாளங் காட்டும்.
முகமும் முகவரியும் கொடுக்கும்.


இப்புத்தகங்களில்
வாசிக்கப்படாது விட்ட
பக்கங்கள் ஏராளம்;
புரியப்படாது போன
தத்துவங்கள் தாராளம்.


சிலபோது..,
மனிதப் புத்தகங்களை வாசிக்கிறோம்,
கிரகிக்க மறந்துவிடுகிறோம்.



அஞ்சத் தேவையில்லை!
எல்லாப் புத்தகங்களும் நல்ல புத்தகங்கள்.
வாசிப்புகளே புதிய புரிதல்களை ஏற்படுத்துகின்றன.
புரிதல்கள்,
உறவுகளை வடிவமைக்கின்றன.
ஊடாட்டத்தை ஒழுங்குபடுத்துகின்றன.


மனிதப் புத்தகங்களை
கிரகித்து வாசி!
ஏனெனில்..,
நீ மனிதக் கிரக வாசி!



மனிதர்களை நீ வாசித்தால்..,
நிச்சயமாய் நீ,






நடமாடும் கலைக்களஞ்சியமாவாய்,
நீ மற்றவர்களால் வாசிக்கப்படுவாய்..!



நீ மெய்ஞானியாக
வேண்டுமானால்
மனிதர்களை வாசி!
நீ மெய் ஞானியாக வேண்டுமானாலும்
மனிதர்களை வாசி!
நீ மனிதர்களை வாசிக்க வாசிக்க
மக்களின் மனவாசி ஆகிவிடுகிறாய்..!













இஸ்பஹான் சாப்தீன்
2011.01.02

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

சப்தங்களின் அதிகாரம்.

'அதிகாரம்' குறித்து அதி காரமாக அலசியாயிற்று. 'அதிகாரதிற்கு எதிரான குரல்' பல அதிகார பீடங்களையும் கேள்விக்கு உட்படுத்தியது. அது, ஒரு வகையில் அநுகூலமான விளைவுகளையும் ஏற்படுத்தியது. பின்னரான உரையாடல்கள் 'அதிகாரக் கட்டவிழ்ப்பு' என்ற பெயரில் ஆரம்பமாயின. இதுவும் ஒரு வகையில் வரவேற்கத்தக்க விளைவுகளை சமூக மட்டத்தில் ஏற்படுத்தின. ஆனால், எந்த ஒரு மனித சிந்தனையும் மிகத்தீவிரமாகப் பின்பற்றும், அத்துமீறிய ஒரு குழு தோன்றுவது வரலாறு கண்ட உண்மை. இச் சிந்தனையும் இதற்கு விதிவிலக்கல்ல. 'அதிகாரக் கட்டுடைப்பு' என்கின்ற பெயர் தாங்களில் தீவிர சிந்தனையாளர்கள் இதன் பின்னர் உருவானார்கள். இவர்களின் பேசு தளங்களில் பெரும்பாலானவை இயல்பிற்கு முரணானவையாகவே இருக்கின்றன என்பது மத்திம அல்லது நடுநிலை சிந்தனையாளர்களின் அவதானம்.

அதிகாரம் குறித்து பலரும் பலவாராக பேசிய போதிலும் மத்திம சிந்தனைத் தளத்தில் நின்று உரையாடுவதே தகுந்த பலனைத் தரும். அதிகாரத்திற்கு எதிராக பேசுகின்றவர்கள் மனித இயல்பிற்கும் இயற்கை விதிகளுக்கும் முரணாகாமல் பேசுகின்ற போது அது, சிறந்த சிந்தனையாகப் பரிணமிக்கும்; தகுந்த வரவேற்பை பெறும்; யதார்த்தத்திற்கு நெருங்கியதாக இருக்கும். இஸ்லாம் சகல விடயங்களையும் சிந்தனைகளையும் நடுநிலையாகவே பார்க்கின்றது.